சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Sunday, February 12, 2006

பாடல் 6 - பூனைக்குட்டி

பூனைக்குட்டி


மியாவ் மியாவ் பூனைக்குட்டி

மீசை வச்ச பூனைக்குட்டி
பையப் பையப் பதுங்கி வந்து
பாலைக் குடிக்கும் பூனைக்குட்டி

பளபளக்கும் பளிங்குக் குண்டு
பளிச் சென்று முகத்தில் இரண்டு
வெளிச்சம் போடும் விழி கண்டு
விரைந்தோடும் எலியும் மிரண்டு

விரித்த பூவைக் கவிழ்த்ததுபோல
விளங்கும் பூனைக் காலடிகள்
இருந்து தவ்வ ஏற்றபடி
இயங்கும் சவ்வுத் தசைப்பிடிகள்

அழகு வண்ணக் கம்பளி யால்
ஆடை உடுத்தி வந்தது போல்
வளர்ந்து முடியும் பலநிறத்தில்
வந்து தாவும் பூனைக்குட்டி

விரட்டி விலங்கினைக் காட்டிலே
வீரங் காட்டும் புலியினமே
துரத்தி எலியை வீட்டினிலே
தொல்லை தீர்க்கும் பூனை தினமே

-கொல்லங்குடி உடையப்பன்

Thursday, February 09, 2006

பாடல் - உப்போ உப்பு

உணவில் உப்பு இருந்தால் தான்
உண்ண முடியும் நம்மாலே!
கணமும் உப்பு இல்லாமல்
காலம் தள்ள முடியாதே!

உப்பின் தந்தை கடலாகும்
உப்பளம் உப்பின் இடமாகும்!
உப்பில் அயோடின் இருந்தால் தான்
உடலும் நலமாய் இருந்திடுமே!

உப்பை அதிகம் சேர்த்தாலே
உயரும் ரத்த அழுத்தமே!
எப்பவும் அளவாய் இருந்தாலே
என்றும் நலமாய் வாழ்ந்திடலாம்!

உப்பு யாத்திரை குஜராத்தில்
உத்தமர் காந்தி தலைமையிலே!
உப்புக் காகப் போராட்டம்
உலகை உலுக்கி எடுத்ததுவே!

உப்பே உணவுக்குச் சுவையாகும்
உப்பின்றேல் அது குப்பையாகும்!
உப்பும் உணவும் போலவே நாம்
உலகில் ஒன்றாய் வாழ்வோமே!

பி. வி.கிரி