சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Wednesday, May 31, 2006

பாடல் 38 - கொழுக்கட்டை

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல

மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்

புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்

மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.

பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.

பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.

அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.

பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.

எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?

Tuesday, May 30, 2006

பாடல் 37 - மயிலே! குயிலே!

ஆடிக்களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித்தா

ஓடித்திரியும் இளங்கன்றே வா
அம்மா என்று சொல்ல சொல்லித்தா!

பறந்து திரியும் காக்கா வா
பகுதுண்ணும் பழக்கம் சொல்லித்தா!

பாடிக் களிக்கும் குயிலே வா
பாட்டுப் பாடச் சொல்லித்தா

தாவும் மானே அருகே வா
தாவிக் குதிக்கச் சொல்லித்தா

கூவும் கோழி இங்கே வா
கூவி எழுந்திடச் சொல்லித்தா!

தாவித் திரியும் அணிலே வா
சுவையான பழம் பறிக்கச் சொல்லித்தா!

குதித்து ஓடும் முயலே வா
கூடி வாழும் வழி சொல்லித்தா!

கிள்ளை மொழி பேசும் கிளியே வா
பிள்ளைத்தமிழிலில் பேச சொல்லித்தா!

வாலை ஆட்டும் நாய்க்குட்டியே வா
வீட்டை காக்கும் கலையை சொல்லித்தா!

Monday, May 29, 2006

பாடல் 36 - நிலா

“வட்ட நிலா சுற்றிச்சுற்றி
வானில் ஒடுது

வா வென்றே நானழைத்தால்
வர மறுக்குது!

எட்டி எட்டிப் பார்த்தாலுமே
எட்டப் போகுது

ஏனென்று கேட்டால் அது
சிரித்து மழுப்புது"

-- முத்தமிழ் மன்றம்

Sunday, May 28, 2006

பாடல் 35 - அம்மா

அம்மா அம்மா வருவாளே
அன்பாய் முத்தம் தருவாளே
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்

கட்டி பிடித்து அணைத்தாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும்
சொந்தம் நமக்கு அம்மாவே!

Wednesday, May 24, 2006

பாடல் 34 - பாப்பா










குட்டி குட்டி பாப்பா
குண்டு கன்னம் பாப்பா
தத்தி தத்தி நடந்திடும்
கட்டித் தங்க பாப்பா

கண்கள் உருட்டி மிரட்டுவாள்
வாய் பொத்தி சிரிக்கும் பாப்பா
சுட்டித்தனம் செய்திடும்
எங்கள் சக்தி பாப்பா

Monday, May 22, 2006

பாடல் 33 - நல்ல நாய்க்குட்டி

சின்னச் சின்ன நாய்க்குட்டி
தூய வெள்ளை நாய்க்குட்டி

பஞ்சுப் பொதி நாய்க்குட்டி
பன்னும் தின்னும் நாய்க்குட்டி

சின்னச் சின்னக் குழந்தைகள்
கொஞ்சி மகிழும் நாய்க்குட்டி

உன்னைக் கண்டால் பிஞ்சுகள்
நெஞ்சம் மகிழ்ச்சி கொள்ளுமே!

துள்ளித் துள்ளி ஓடுவாய்
உன்னை அள்ளி அள்ளித் தூக்கலாம்

வாசலிலே மற்றவர் வந்து
நின்றால் போதுமே!
சிங்க கர்ஜனை செய்வாயே!

சிறுவர் விரும்பும் நாய்க்குட்டி
பாலும் ரொட்டியும் பாந்தமாய்
தந்து விட்டால் போதுமே!

வாலை வாலை ஆட்டியே
வரவேற்பு தருவாயே!

Sunday, May 21, 2006

பாடல் 32 - சின்னஞ்சிறு வயசிலே

சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)

காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)

எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)

மஞ்சுளாசுந்தர்.
முத்தமிழ் மன்றம்

Saturday, May 20, 2006

பாடல் 31 - காட்டில் ஒரு திருமணம்

கருங்குருவி வீட்டில்
ஒரு கலியாணம் நடந்ததாம்

காட்டில் உள்ள பறவையெல்லாம்
கலந்து வேலை செய்திற்றாம்

ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடி
ஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்

இரண்டுக் குயில் பறந்து வந்து
இனிமையாகப் பாடிற்றாம்

மூன்று மயில் நடந்து வந்து
முனைந்தழகாய் ஆடிற்றாம்

நான்கு அன்னம் நடந்து வந்து
நாட்டியங்கள் செய்திற்றாம்

ஐந்துக் கிளி கூடிப் பெண்ணை
அலங்கரிக்கச் சென்றதாம்

ஆறு புறா கூடிப்பிள்ளை
அழகுச்செய்ய போயிற்றாம்

ஏழு மைனா கூடிக்கொண்டு
விருந்தினரை அழைத்ததாம்

எட்டுக் காடை கூடிக்கொண்டு
கொட்டுமேளம் கொட்டிற்றாம்

ஒன்பது காக்கை கூடிக்கொண்டு
உறவினரை அழைத்தாம்

பத்து கொக்கு பறந்து வந்து
பந்தல் வேலை பார்ததாம்

Friday, May 19, 2006

பாடல் 30 - பொன்ஸ் வீட்டு பொம்மு
















எங்கள் வீட்டுப் பூனை
எங்கும் ஓடும் பூனை
முறுக்குத் தின்னும் பூனை
மூலையில் அமரும் பூனை

எலியைக் கண்டு விரைவாய்
எதிர்ப்பக்கம் ஓடும் பூனை
சலிக்காமல் தான் வெளியே
சாலை சுற்றும் பூனை

பல்லி பிடித்து வாலை
மட்டும் வெட்டும் பூனை
மல்லிப்பூ போல் வெண்மை
மாறாத பூனை

தங்கையோடு சேர்ந்து
தானும் தூங்கும் பூனை
சங்கு கழுத்தைத் தூக்கி
தாய்மடி கேட்கும் பூனை

நாயைக் கண்டு நடுங்கி
நன்றாய் ஓடும் பூனை
வாயை மெல்லத் திறந்து
கொட்டாவி விடும் பூனை

காலை சரியாய் அழைத்து
உறக்கும் கலைக்கும் பூனை
பாலைக் குடித்து மீதம்
பகைக்கும் வைக்கும் பூனை

பகை = பகைவனான காட்டுப் பூனை :)

சகோதரி பொன்ஸ் (http://www.blogger.com/profile/650829) தன் வீட்டு பூனையின் புகழ் பாடி எழுதிய பாடல்.

Thursday, May 18, 2006

பாடல் 29 – தங்கை

தங்கை என்றன் தங்கை
தள்ளாடி வரும் தங்கை
தங்க மான தங்கை
தவழ்ந்து வரும் தங்கை.

பட்டுச் சட்டை கேட்டு
புரளி செய்யும் தங்கை
வட்ட நிலவைக் காட்டி,
வாங்கச் சொல்லும் தங்கை.

பாட்டுச் சொல்லித் தந்தால்,
பாடி ஆடும் தங்கை
பாட்டி மடியில் சென்று,
படுத்துக் கொள்ளும் தங்கை.

-சாரண கையூம்

Wednesday, May 17, 2006

பாடல் 28 – வேண்டும் முயற்சி

சிலந்தி வலையை பாருங்கள்
சின்னஞ் சிறிய பூச்சியே
வளைந்து வளைந்து புதுமையாய்
வட்ட வலையைப் பின்னுமே!

தேனிக் கூட்டை பாருங்கள்
திறமை யோடு ஒற்றுமை
பேணி வீட்டைக் கட்டுமே
பெரிய முயற்சி வேண்டுமே

எறும்புப் புற்றைப் பாருங்கள்
எள்ளைப் போன்ற எறும்புகள்
அருமையான முயற்சியால்
அழகுப் புற்றைச் செய்தன

குருவிக் கூட்டைப் பாருங்கள்
குடுக்கை போன்று பின்னியே
விரைவில் கட்டி முடிக்குமே
வேண்டும் முயற்சி என்றுமே!-

-- பெருஞ்சித்திரனார்
மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து...



நன்றி: பாஸிடிவ் ராமா– நம்பிக்கை கூகிள் குழுமம்

Tuesday, May 16, 2006

பாடல் 27 - நம்பிக்கை காக்கா

காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்ததாம்

அங்குமிங்கும் தேடியே
வீடு நோக்கிச் சென்றதாம்

அங்கு சிறிய ஜாடியில்
கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம்

எட்டி எட்டி பார்த்ததாம்
எட்டாமல் போனதாம்

சிறிய சிறிய கற்களை
பொறுக்கி கொண்டு போட்டதாம்

தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீர குடித்ததாம்

நம்பிக்கையுடைய காக்கா தான்
சந்தோஷமாய் பறந்ததாம் (3)



நன்றி: ஜெயந்தி அர்ஜீன் – நம்பிக்கை கூகிள் குழுமம்

Monday, May 15, 2006

பாடல் 26 - நல்லவனும் கெட்டவனும் (துளசி அக்கா)

ராமு மிகவும் நல்லவனாம்,
நடத்தையில் மிக்க உயர்ந்தவனாம்.

எவருக்கும் அன்பாய் நடப்பவனாம்
இரக்கம் மிகவும் உடையவனாம்.

ஆயினும் நல்லவன் என்றவனை
அறிபவர் மிகமிகச் சிலரேதான்.

ஒருநாள் வீதியில் பெருங்கூட்டம்
ஒன்று கூடி நிற்பதை நான்

கண்டேன். உடனே, சென்றங்கே
காரணம் யாதெனக் கேட்டேன் நான்.

பாலு என்னும் ஒரு பையன்
பழக்கடை ஒன்றில் நுழைந்தானாம்;

மாம்பழம் ஒன்றை எடுத்தானாம்,
மறைத்து மடியில் வைத்தானாம்.

பார்த்ததும் உடனே கடைக்காரர்
'பட்'டென அறைகள் விட்டாராம்.

'திருடன், திருடன்' என்றவனைத்
திட்டினர் அங்கு யாவருமே.

பாலு கெட்டவன் என்றறியப்
பத்தே நிமிடம் ஆனதடா.

ராமு நல்லவன் என்றுணர
நாட்கள் பற்பல ஆகுமடா.

கெட்டவன் என்ற பெயரெடுக்க
'சட்'டென முடியும். ஆனாலோ

நல்லவன் என்ற பெயர் பெறவே
நாட்கள் மிகவும் ஆகுமென

அறிந்தேன், அன்று ஓர் உண்மை
அடைவோம் இதனால் பெரும் நன்மை.
-----------------------


எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1

பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்

Sunday, May 14, 2006

பாடல் 25 - லட்டும் தட்டும்

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு.

எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.

மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு.

கிட்டு நான்கு லட்டு,
பட்டு நான்கு லட்டு,
மொத்தம் தீர்ந்த தெட்டு
மீதம் காலித் தட்டு


எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1

பாடலை அனுப்பியவர்கள்: சகோதரி தேன் துளி, அக்கா துளசி கோபால்

பாடல் 24 - கத்திரிக்கா (தேன் துளி)

கத்திரிக்கா நல்ல கத்திரிக்கா
காம்பு நீண்ட கத்திரிக்கா
புத்தம் புது கத்திரிக்கா
புதுச்சேரி கத்திரிக்கா
நாராயணன் தோட்டத்துல
நட்டுவச்ச கத்திரிக்கா
பறிச்சு நீயும் கொண்டு வா
கூட்டு பண்ணி தின்னலாம்


நன்றி: சகோதரி தேன் துளி

Saturday, May 13, 2006

பாடல் 23 - பொம்மை

சின்ன சின்ன பொம்மையிது
சீருடைய பொம்மை
இது சீருடைய பொம்மை
என்தனது தாயாரு
எனக்கு தந்த பொம்மை
இது எனக்கு தந்த பொம்மை

சட்டையிட்டு, தொப்பியிட்டு
நிற்கும் இந்த பொம்மை
இது நிற்கும் இந்த பொம்மை
பொட்டும் வச்சி, பூவும் வச்சி
நிற்கும் இந்த பொம்மை
இது நிற்கும் இந்த பொம்மை

சாவிகொடுத்தா சிரிக்குமது
மணியடிச்சா தூங்கும்
இது மணியடிச்சா தூங்கும்
நல்ல நல்ல நாட்டியங்கள்
செய்யும் இந்த பொம்மை
இது செய்யும் இந்த பொம்மை

அம்மாதந்த பொம்மையிது
சும்மா தருவேனோ
நான் சும்மா தருவேனோ
சுற்றி சுற்றி வந்தாலுமே சும்மாக்கிடைக்காது
இது சும்மாக்கிடைக்காது

நன்றி: ஜெயந்தி அர்ஜீன் – நம்பிக்கை கூகிள் குழுமம்

Tuesday, May 09, 2006

பாடல் 22 - பூனையார் (துளசி அக்கா)

பூனையாரே பூனையாரே,
போவதெங்கே சொல்லுவீர்?

கோலிக்குண்டு கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?

பஞ்சுக்கால்களாலே நீர்
பையப் பையச் சென்றுமே

என்ன செய்யப்போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?

அங்கு எங்கே போகிறீர்?
அடுப்பங்கரையை நோக்கியா?

சட்டிப் பாலைக் குடிக்கவா
சாது போலச் செல்கிறீர்?

சட்டிப் பாலும் ஐயையோ
ஜாஸ்தியாகக் கொதிக்குதே!

தொட்டால் நாக்கைச் சுட்டிடும்
தூர ஓடிப் போய்விடும்!


எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1

பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்

Saturday, May 06, 2006

பாடல் 21 - கோயில் யானை (துளசி அக்கா)

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

மணியை ஆட்டி வருகுது
வழியை விட்டு நில்லுங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

ஆடி ஆடி வருகுது
அந்தப் பக்கம் செல்லுங்கள்

ஊரைச் சுற்றி வருகுது
ஓரமாக நில்லுங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்

குழந்தைகளே பாருங்கள்
குதித்து ஓடி வாருங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1

பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்

Friday, May 05, 2006

பாடல் 20 - சிட்டு

சிட்டே சிட்டே பறந்து வா
சிறகைச் சிறகை அடித்து வா

கொட்டிக் கிடக்கும் மணிகளைக்
கொத்திக் கொத்தித் தின்னவா

ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய்

சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய்

உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயரச் செல்லணும்

என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு

-- பாசிட்டிவ்ராமா

Thursday, May 04, 2006

பாடல் 19 - மரம் வளர்ப்பேன்

தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறது

பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறது

அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வா போலப் பழம்தருது

அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது

அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போலப் பழுக்கிறது

சின்னஞ் சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே

-- பாசிட்டிவ்ராமா

(நன்றி : இதை அனுப்பிய என் அன்பு நண்பருக்கு)

Wednesday, May 03, 2006

பாடல் 18 - (சாப்) பாட்டு

அ, ஆ சொல்லலாம்
அரிசி பொறி திங்கலாம்

இ, ஈ சொல்லலாம்
இடியாப்பம் திங்கலாம்

உ, ஊ சொல்லலாம்
உளுந்து வடை திங்கலாம்

எ, ஏ சொல்லலாம்
எள்ளுருண்டை திங்கலாம்

ஐ எழுத்து சொல்லலாம்
ஐங் கரனை வணங்கலாம்

ஒ, ஓ சொல்லலாம்
ஓமப் பொடி திங்கலாம்

ஔ எழுத்து சொல்லலாம்
ஔவையாரை வணங்கலாம்.

அக் என்று சொல்லலாம்.
அக்தோட முடிக்கலாம்

- பாசிட்டிவ்ராமா

Monday, May 01, 2006

பாடல் 17- மழை (சுகா)

வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா

இடியிடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்

மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்

தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்

எட்டு திக்கும் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே

தெருவெங்கும் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே

தவளை கூட பாடுமே
தண்ணீரிலே ஆடுமே

அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை

நன்றி - சுகா (http://sukas.blogspot.com/2006/04/blog-post_02.html)